
கடல்
சத்தமிடும் ரகசியம்.
காலவெள்ளம்
தேங்கிநிற்கும் நீலப் பள்ளம்.
வாசிக்கக் கிடைக்காத
வரலாறுகளைத் தின்றுசெரித்து
நின்றுசிரிக்கும் நிஜம்.
கடல்...
ஒருவகையில் நம்பிக்கை...
ஒருவகையில் எச்சரிக்கை.. .
கடல்குடித்துக் கொண்டிருந்த
கலைவண்ணன்
மடியில்கிடந்த
தமிழ் ரோஜாவை
மறந்துபோனான்.
அவள் அழகின் நவீனம்.
சிறகு களைந்து சுடிதார்கொண்ட
சொப்பனதேவதை
ரத்த ஓட்டம் பாயும்
தங்கம் அவள் தேகம்.
பொறுக்கி எடுத்த
உலக அழகுகளை
நெருக்கித் தொடுத்த
நேர்த்தியான சித்திரம்.
குமரி வயதுகொண்ட
குமரி அவள்.
அவன் அழகன். இளைய அறிஞன்.
காதலிக்கும்போதும் கம்பீரம்
குறையாதவன்.
"என்ன யோசனை?"
என்றாள் தமிழ்.
கலைவண்ணன் மனது
கரையேறியது.
"இந்தச் செவிட்டுக் கரைகளோடு
அந்த அலைகள் இத்தனை
யுகங்களாய் அப்படி என்னதான்
பேசும் என்று யோசிக்கிறேன்"