பக்கங்கள் . . .

5) கடல் நம் தாய்



முதல் உயிர் பிறந்தது

கடலிலா?

நம்புவதெப்படி நான்?”

கலையின் கழுத்தைக்

கட்டிக்கொண்டாள் தமிழ்.

ஒருவருக்கான காற்றை

இருவரும் சுவாசித்தார்கள்.

சுகபோதையிலும் கலைவண்ணன்

உண்மை உளறினான்.


கடலில் பிறந்த முதல் உயிர்

தண்ணீரில்தானே சுவாசித்திருக்க

முடியும்.

அந்த மரபுரிமையின்

தொடர்ச்சிதான் இன்றும்

கர்ப்பத்தில் வளரும் சிசு

தண்ணீர்க் குடத்தில்

சுவாசிக்கிறது.


ஆகா, என்று ஆச்சரியம்

காட்டிய தமிழ் அவன் முகத்தில்

முள்குத்தாத பிரதேசம்தேடி

முத்தமிட்டாள்.

அந்த முத்தச்சூடு உயிரெல்லாம்

பரவக்கண்டவன், அவள்

கழுத்தடியில் கைபதித்துக்

குளிரக்குளிரக் குறுமுடி

கோதினான்.


குழந்தையே.

என் குழந்தையேஎன்று

கொஞ்சினான்

புரிகிறதா?

கடல் நம் தாய்.

தாய்கண்டு தமிழ் அஞ்சலாமா?


தாயென்றால் பூமியை அவள்

ஏன் புசிக்க வேண்டும்?”


அவள் மீது குற்றமில்லை.

கடலின் கீழேநகரும் பாறைகள்

அவளை நகர்த்திவிடுகின்றன.

அவளுக்கா கருணையில்லை?

கடல் தந்த அனுமதியால்தான்

முழ்காத நிலப்பகுதி முச்சுவிட

முடிகிறது.