பூமியில் கிடந்துகொண்டே
இந்தக் கடல்
தூரத்துவானத்துக்குத்
தூரிகையில்லாமல் எப்படி வர்ணமடிக்கிறது
என்று யோசிக்கிறேன்.
மடியில் கிடந்தவள் நொடியில்
எழுந்தாள்.
"நீங்கள் கடல்பைத்தியம்"இல்லை. நான் கடற்காதலன்.
"கடல் உங்களுக்குச் சலிக்கவே
சலிக்காதா?"
"காதலியும் கடலும் சலிப்பதில்லை தமிழ்ரோஜா"
அவள் மல்லிகைக்கரம் தொட்டு
மணிக்கட்டில் முத்தமிட்டான்.
நேசமின்சாரம் நெஞ்சுக்குள் பரவியது.
அவளை இழுத்து வளைத்து
இறுக்கி இறுக்கி உருக்கி உருக்கி
மடியில் ஊற்றிக் கொண்டான்.
ஓர் அலை அவர்கள் மீது அட்சதை தூவியது.
காதுமடல்களின் வெயில்மறைவுப்
பிரதேசங்களில் விளையாடி
அவன் விரல் நன்னம்பிக்கை முனைநோக்கி
நகர்ந்தபோது வெடுக்கென்று விலகிக்
கொண்டவள் பொய்க் கோபத்தில் பூத்தாள்.
அவன் அறிவான் - ஊடல் என்பது
பசிதூண்டும் பந்தி. பந்திக்கு முந்தியவளை
வம்புக்கிழுத்தான்.
வா. கொஞ்ச நேரம் கடலோடு கால்நனைப்போம்.
"அய்யோ! கடலுக்குள்ளா? நான் மாட்டேன்"
கலாபமயில் கூட்டுப்புழுவானது குறுகிக் குறுகி.
ஏன்? என் மீது நம்பிக்கையில்லையா?
"இல்லை, கடல்மீது நம்பிக்கையில்லை"
எதனால்?
"ஆக்டோபஸ் அலைகள் என்னை அள்ளிக்
கொண்டோடிவிட்டால்?"