பக்கங்கள் . . .

3) அவளின் பெயர்



அப்படியாவது கடல்நீர் குடிநீராகட்டுமே.

சிரித்தது அவன் நுரைத்தது கடல்

தள்ளி நின்றாள் தமிழ்ரோஜா

தான்மட்டும் அலைதாண்டிக் கடல்புகுந்தான்

கலைவண்ணன்.


வா

"மாட்டேன். எனக்கு பயம்

தண்ணீர் பயம்.

குடிநீர் குளிநீர் தவிர

எல்லாம் பயம்.


வெள்ளித்திரையில் வெள்ளம் பார்த்தாலே

விழிமுடிக் கொள்வேன்.


ஆறோ ஏரியோ கடலோ என் கனவுகளில்

ததும்பும்போது என் படுக்கையில் நான்

வியர்த்து விழிக்கிறேன்.

மாட்டேன் கடலாட மாட்டேன்.

என்னை

ஆபத்துக்குள் அழைக்காதீர்கள்.

ஒரே ஒரு பயம்

எனக்கு தண்ணீர் பயம்"


பேசப் பேச அவள்

படபடப்பைப் பறைசாற்றின

கண்களில் உடைந்துவிழுந்த

மின்மினி மின்னல்கள்.


கலைவண்ணன் கரைமீண்டான்.

அவளை

ஆதரவாய் அணைத்து

அங்கவதிரமாய்த் தோளில் அணிந்து


அவள் சுட்டுவிழி தாழும் வேளை

கன்னத்தில் சுட்டுவிரல்

கையெழுத்திட்டான்.

காதல் மண்டியிட்டான்.


காதில்

ஓதினான்.

"தமிழ் ரோஜா "

அதைவிட சுகமாக

அம்சத்வனிராகம்கூட அவள்

பெயரை உச்சரித்திருக்க

முடியாது.


காதல் அழைக்கும் போதுதான்

பெயர்வைத்ததன்

பெருமைபுரிகிறது.