பக்கங்கள் . . .

15) உடைந்து தலைகாட்டும் நியாபக சுவடுகள்


எனக்குச் சோளக்கூழில்

மிதக்கும் மிளகாயும் தெரியும்.

உங்கள் சாராயக் கிண்ணங்களில்

முழ்கிமிதக்கும் பனிக்கட்டிகளும்

தெரியும்.


எனக்கு மழையில் நனைந்த

வைக்கோல் வாசமும்

தெரியும். சொட்டுக்கு ருபாய்

நூறு தந்தால் மட்டுமே

மணக்கும் அரேபிய அத்தரும்

தெரியும்.


செருப்பில்லாத எனது

பாதத்தில் காட்டுப்பாதையில்

குத்திய கருவேலமுள்ளை

நகரத்துத் தார்ச்சாலையில்

வந்து தேய்த்தவன் நான்.


நீங்கள் விதையில்லாத

திராட்சைகளை விழுங்கி

வளர்ந்தவர்கள். நான்

கற்றாழைப்பழத்தின்

அடியிலிருக்கும் நட்சத்திரமுள்

பார்த்தவன்.


நான் சென்னை வந்தது என்

அறிவுக்கு அங்கீகாரம் தேடி

அல்ல. உடல் உழைப்புக்கும்

மூளை உழைப்புக்குமான

வித்தியாசத்தின் வேர்காண

வந்தேன்.


சென்னை நூலகங்களில்

வாடகைதராமல் வசித்தேன்.


இரைப்பையைப் பட்டினியிட்டு

மூளைக்குப் புசித்தேன்.

சமுகத் தேடல் கொண்ட

பத்திரிகையில் சேர்ந்தேன்.


ஒரு கல்லூரி விழாவில் உங்கள்

மகளைச் சந்தித்தேன்.


முதன் முதலில் என் உயிர்மலரக்

கண்டேன். மென்மைச் சிறையைவிட்டு

அவளை மெல்ல மெல்ல மீட்க

நினைக்கிறேன்.


ஏனென்றால் நான் பயணிப்பது

மயிலிறகு பரப்பிய மல்லிகைப்

பாதையல்ல.

14) சுடும் சொல் மென்மையானது


"அவள் உங்களுக்குத் தகுதி

இல்லாதவளா?"

அப்படியில்லை.

அன்பில் - குணத்தில் -

காதலில் அவள் என்னிலும்

மிக்கவள்.


ஆனால், என்

வாழ்க்கைக்குத் தயாராய்

அவள் இன்னும்

வார்க்கப்படவில்லை.

என்னுடையது புயல்யாத்திரை.

அவள் பூயறைக்

குத்துவிளக்கு. அணைந்து

போகாமலிருப்பது எப்படி

என்பதைச் சுடருக்குச்

சொல்லிக்

கொடுக்கவேண்டும்.


அகத்தியர் பேசவில்லை.


தன் மௌனத்தைப் புகையாய்

மொழி பெயர்த்தார்.


பிறகு வேர்களில் வீழாமல்

இலைகளைமட்டும் நனைக்கும்

சாரலாய் - கலைவண்ணன்

காதுதொடாமல் தனக்குத்

தானே பேசிக்கொண்டார்.


நான் தவறான இடத்தில்

தலையாட்டி விட்டேனா?


காற்றில் கசிந்த வார்த்தை

அவன் காதுகளில்

விழுந்துவிட்டது.


சுள்ளென்று

ஏதோ சுட்டது.

பொங்கிவழியாமல்

புலனடக்கம்கொண்டான்.


மோனோலிசாவின்

புன்னகைதிருடி உதடுகளில்

ஒட்டிக்கொண்டான்.


மெல்ல

மெல்லச் சொல்லவிழ்த்தான்.

நீங்கள் தலையாட்டியது

தப்பானவனுக்கல்ல.

சரியானவனுக்குத்தான்.


எனக்குக் கிராமத்துக்

குட்டிச்சுவர் வாழ்க்கையும்

தெரியும். நகரத்து நட்டசுவர்

வாழ்க்கையும் தெரியும்.

13) வாழ்க்கையின் இருதிவரைக்குமான ஒப்பந்தம்


"அவள் மென்மையானவள்."


அப்பாக்கள் செய்யும்

இரண்டாம் தவறு இது.

மென்மையை நீங்கள்

கற்பிக்கிறீர்கள்.


பெண்களின்

செருப்பைக்கூட

மெல்லியதோலில்

வடிவமைக்கிறீர்கள்.


பதினாறு

வயதுக்கு மேலும் பலூன்வாங்கி

வருகிறீர்கள்.


சில்லென்று முளைக்கும்

சிறகுகளைக்கூட வேண்டாத

ரோமங்களென்று வெட்டி

விடுகிறீர்கள்.


அதனால்தான் காற்று

கடுமையாக அடித்தாலே பல

பெண்களுக்கு ரத்தம்

கசிந்துவிடுகிறது.


ஒன்று சொல்கிறேன்

உங்களுக்கு.


என் உயிரின்

கடைசிச்சொட்டுவரை

அவள்தான் நிறைந்திருக்கிறாள்.

என்

நீண்ட பயணத்திற்குத் தகுதியாக

அவளைத் தயாரிக்கவேண்டும்.

12) இயல்பும் திரிபும் இரு வேறு கோணங்கள்

"சில குணங்களை

எதிர்த்திடக்கூடாது.

ஏற்றுக்கொள்ள வேண்டும்."


இயல்புகளை

ஏற்றுக்கொள்ளலாம்.

திரிபுகளை ஏற்றுக்கொள்ள

முடியாது.


எனக்கு நீல விழிகள் பிடிக்கும்.

ஆனால்,

தமிழ் ரோஜா விழிகள்

கருமை.

இருள் உறைந்த கருமை.

நிறம் என்பது

நிறமிகளின் வேலை.

அது இயல்பு.

ஏற்றுக்கொள்கிறேன்.

ஆனால் நீரச்சம் என்பது

திரிபு. அது விழியின்

கருமைபோல் இயல்பானதல்ல.

துணியில்

அழுக்கைப்போல் திரிபானது.

மனச்சலவை ஒன்றே

மருந்து.


"சலவை செய்யும் ஆர்வத்தில்

சல்லிசல்லியாகிவிடக் கூடாது."

11) மகளின் அப்பா


கனவுகள் நிஜங்களாகவும்

நிஜங்கள் கனவுகளாகவும்

தோன்றும், அந்தப்

பள்ளிவயதில் கொடைக்கானல்

ஏரியில் பள்ளித் தோழிகளோடு

இவள் படகில் போனாள்.


அது கவிழ்ந்தது.


மீட்கப்பட்டவள்

இவள் மட்டும்தான்.


சில

நாட்களில் ஏரியெங்கும்

சீருடைப்பிணங்கள் மிதந்தன.


அன்று கொண்ட நீரச்சம்

இன்றும் தீரவில்லை.


நீரச்சம் நிரந்தர அச்சம் அல்ல.

நிச்சயம் களையலாம்.


இல்லையென்றால் அந்தப் பயம்

உடலையும் மனதையும்

உள்ளிருந்தே தின்றுவிடும்.


இந்தத் தண்ணீர்பயத்தைத்

தவிர்த்தாக வேண்டும்.


கவனம்.

தூசு எடுக்கும் அவசரத்தில்

கருமணியே

தூர்ந்துவிடக்கூடாது.


"எனக்கு

அவள் ஒரே பெண்."


இதுதான் அடிக்கடி கேட்கும்

அப்பாமொழி.


ஒரே பெண் என்றால்

நூறுசதம் அன்பா?


இரண்டு

பெண்கள் என்றால் ஆளுக்கு

ஐம்பதுசதம் அன்பா?


நான்கு

பெண்கள் என்றால் இதயத்தை

நான்காக்கி இருபத்தைந்து

சதமா?


ஒரே பெண் என்றால்

உயிர்ப்பாசம் வருமா?


இன்னொரு பெண் இருந்தால்

இவள் இறந்துபோகச்

சம்மதமா?


உங்கள் ஆண்மைகலந்த

அறிவுதான் என் மகளைத்

தலைசாயவைத்தது.

என்னைத்

தலையாட்ட வைத்தது.


ஆனால்

தர்க்கம் வேறு. தர்மம் வேறு.

10) பிரயாணத்தில் நுழையும் கிழவர்




சுவாசப்பை

சுத்தம், நுரையீரல் தரைவரை

பிராணவாயு பிரயாணம்.



ஓய்வுதான் தேவை.

உறங்கவிடுங்கள்.

செவிலியின் வெள்ளை அறிக்கை

அவரை வெளியேற்றியது.


அறைக்கு வெளியே தூரத்தில்

தெரிந்த துண்டுவானத்தையே

பார்த்துச் சலித்த கலைவண்ணன்

தன் பக்கத்திலிருந்த

பூந்தொட்டியில் தன்

இதயம்போல் துடிதுடிக்கும்

இலைகளுக்குத் தாவினான்.


சிகரெட் புகை

சிந்தனை கலைத்தது.


புகைக்குப் பின்னே

அகத்தியர் தோன்றினார்.

நல்ல உயரம்.

நாகரிகத் தோற்றம். நாற்பதுகளில்

நட்சத்திரமாய்த் தொடங்கிய

வழுக்கை - ஐம்பதுகளில்

முழுமதியாய்

முற்றுகையிட்டிருந்தது.

தடித்த கண்ணாடி.

தங்கஃபிரேமுக்காக

மன்னிக்கலாம்.


பெருந்தொழில் அதிபர்.


நாடாளுமனறத்தில் -

வரிபாக்கிப்

பட்டியலில் வந்து வந்து

போகிறவர்.


கலைவண்ணனுக்கு அவரிடம்

பிடித்தது அவர் பெண்.

பிடிக்காதது அவர் பிடிக்கும்

சிகரெட்.


தமிழை இன்னும் கொஞ்சம்

மென்மையாய்க்

கையாண்டிருக்கலாம் !

என்றார் அகத்தியர் புகைசூழ.

இப்படி நீரச்சம்கொண்டவள்

என்று நினைக்கவில்லை

நான்.

9) அறை எண் 303


மருத்துவமனை

குடையும் மருந்துவாசம்.

துடைத்துவைத்த சோகம்.

வெள்ளைவெள்ளையாய்

அவசரங்கள்.

ஆங்கிலத்தில் அகவும்

அழகுமயில்கள்.


அறை எண் 303.


மேகத்தில் நெய்தெடுத்த

மெல்லிய போர்வையின்கீழே

சோர்ந்துகிடந்தது

சுடிதார் ரோஜா


அவள் கண்கள்

செயற்கை உறக்கச்

சிறையிலிருந்தன.


பாரிதப் பூவில்

பட்டாம்பூச்சி

உட்காருவதுபோல் படுக்கையில்

பைய அமர்ந்து

அன்புமகள் நெற்றிதொட்டார் அகத்தியர்.


மாலை நேரத்து வெயிலாய்

அது சூடுகுறைந்து சுட்டது.


உடம்பில் இப்போது

உப்புநீர் இல்லை.

8) பூ மூர்ச்சையானது . . . ! !


பிரமைபிடித்துப் பேச்சிழந்தாள்.

தூரத்திலிருந்து

ஒரு பேரலை

அவள் பெயர் சொல்லிக்

கொண்டே

படைதிரட்டி வருவதாய்ப்பட்டது அவளுக்கு.

அவ்வளவுதான்.

அவள் ஞாபகச்சங்கிலி

அறுந்துவிட்டது.

அந்த முர்க்க அலையின்

மோதுதலில் தன்னிலை குலைந்து

தடுமாறி எழுந்து

ஒருகணம் மிதந்து மறுகணம் அமிழ்ந்து

மீண்டும் எழுந்து

மீண்டும் விழுந்தாள்

அலைகளில்

தொலைந்தாள்

7) இலையை தென்றல் சுமக்கும் இது அழகிய காதல்


நீ உணவில்லாமல்

ஒருமாதம் வாழலாம்

நீரில்லாமல்

ஒருவாரம் வாழமுடியாது

தண்ணீர்தான் உயிர்

இந்தக் கடல்

அந்த உயிரின் தாய்

தாயோடு தள்ளி நிற்பதா?

வா

எட்டி நின்றவளைக் கட்டிப்

பிடித்தான்

திமிறினாள்.

வாழைத்தண்டாய்

ஓடிந்தாள்.

வாளை மீனாய்

வழுக்கினாள்.

அவன் முன்னுக்கிழுத்தான்.

அவள் பின்னுக்கிழுத்தாள்.

வேண்டாம். இந்த

விளையாட்டுமட்டும்

வேண்டாம்

என்னோடு வாழ்ந்தால் நீ

நெருப்புப் பள்ளங்கள் தாண்ட

வேண்டியிருக்கும்.

நீர்கண்டு பயந்தால் எப்படி?

நெருப்புப் பயம் இல்லை.

தண்ணீர்தான் பயம்.

அவன் தூக்கமுயன்றான். அவள்

துவண்டு விழுந்தாள்.

கைதட்டிச் சிரித்தன அலைகள்.

நாடகம் பார்த்தன நண்டுகள்.

சிதறிவிழுந்தவளைச்

சேர்த்தெடுத்தான்.

அவளைச் சுமந்து அலையில் நடந்தான்.

அவளோ அந்தரத்தில்

நீச்சலடித்தாள்.

இடுப்பளவுத்

தண்ணீரில் இறக்கிவிட்டான்.

அஞ்சினாள்.

தண்ணீரின் ததும்பலில் மிரண்டாள்.

அவனை உடும்பாய்ப்

பற்றினாள்.

அவன் உதறி ஒதுங்கினான்.

நுரைச் சதங்கைகட்டி ஆடிவந்த

அலைகள்கண்டு அலறினாள்.

6) கடலும் தேவதையும் - அவர்களோடு ஒரு கவியும்


கடல்நீர் இடம்மாறி

நிலப்பரப்பில் நின்றால்

எல்லா இடங்களிலும்

முன்று கிலோமீட்டர் உயரம்

தண்ணீர் நிற்கும்

.

புள்ளிவிரம் சொல்லியே

பொழுது போக்கிவிட்டீர்கள்.


"சரி, நல்லவிவரம் சொல்லட்டுமா?

ஒரு முத்தத்தில்

எத்தனை வோல்ட்

மின்சாரம்தெரியுமா?"


போதும். போதும். . .. .

புள்ளிவிவரப் புலியே.

ஆளைவிடுங்கள்.


விடமாட்டேன்.

வா.

தண்ணீரில் நனை

அல்லது

தண்ணீரை நனை.


அலையோடு

விளையாடு.


தெறிக்கும் திரவநட்சத்திரங்கள்

சொல்லாத இடங்களில் விழுகையில்

இல்லாத அனுபவம் எழுமே....

அந்த சுகம் துய்.


எத்தனை மனிதர்

கடல்பார்த்தனர்?

எத்தனை மனிதர்

இதில் கால்வைத்தனர்?

வா.

இந்தச் சிற்றலையில்

கால் வைத்து

யாரும் செத்துப்போனதில்லை.


தண்ணீர் பயம் தவிர்.


சொட்டச் சொட்ட நனை.


கிட்டத்தட்டக் குளி.


நீரின் பெருமை நிறையப்பேர்

அறியவில்லை.


காதலி பெருமை பிரிவில்.

மனைவி பெருமை மறைவில்.

தண்ணீரின் பெருமை

பஞ்சத்தில் அல்லது வெள்ளத்தில்.