பக்கங்கள் . . .

15) உடைந்து தலைகாட்டும் நியாபக சுவடுகள்


எனக்குச் சோளக்கூழில்

மிதக்கும் மிளகாயும் தெரியும்.

உங்கள் சாராயக் கிண்ணங்களில்

முழ்கிமிதக்கும் பனிக்கட்டிகளும்

தெரியும்.


எனக்கு மழையில் நனைந்த

வைக்கோல் வாசமும்

தெரியும். சொட்டுக்கு ருபாய்

நூறு தந்தால் மட்டுமே

மணக்கும் அரேபிய அத்தரும்

தெரியும்.


செருப்பில்லாத எனது

பாதத்தில் காட்டுப்பாதையில்

குத்திய கருவேலமுள்ளை

நகரத்துத் தார்ச்சாலையில்

வந்து தேய்த்தவன் நான்.


நீங்கள் விதையில்லாத

திராட்சைகளை விழுங்கி

வளர்ந்தவர்கள். நான்

கற்றாழைப்பழத்தின்

அடியிலிருக்கும் நட்சத்திரமுள்

பார்த்தவன்.


நான் சென்னை வந்தது என்

அறிவுக்கு அங்கீகாரம் தேடி

அல்ல. உடல் உழைப்புக்கும்

மூளை உழைப்புக்குமான

வித்தியாசத்தின் வேர்காண

வந்தேன்.


சென்னை நூலகங்களில்

வாடகைதராமல் வசித்தேன்.


இரைப்பையைப் பட்டினியிட்டு

மூளைக்குப் புசித்தேன்.

சமுகத் தேடல் கொண்ட

பத்திரிகையில் சேர்ந்தேன்.


ஒரு கல்லூரி விழாவில் உங்கள்

மகளைச் சந்தித்தேன்.


முதன் முதலில் என் உயிர்மலரக்

கண்டேன். மென்மைச் சிறையைவிட்டு

அவளை மெல்ல மெல்ல மீட்க

நினைக்கிறேன்.


ஏனென்றால் நான் பயணிப்பது

மயிலிறகு பரப்பிய மல்லிகைப்

பாதையல்ல.

No comments: